மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த தொண்டர்கள் பலர் கூட்டம் கூட்டமாக மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர்.
அந்தவகையில் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா தொண்டர்கள் 150 பேர் நேற்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இதற்காக இளம்பஜார் பகுதியில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
பா.ஜனதாவில் இருந்து விலகிய தொண்டர்களை அதில் நிறுத்தி அவர்கள் மீது கிருமிநாசினி(சானிடைசர்) தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களுக்கு தங்கள் கட்சிக்கொடியை வழங்கி கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
இது குறித்து உள்ளூர் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘பா.ஜனதாவில் பணியாற்றியவர்களை மீண்டும் ஏற்பதற்கு முன் அவர்களை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 200 பேர் சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்திருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக்கொண்டனர். பா.ஜனதாவில் இணைந்து தாங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரமாக இதை மேற்கொண்டதாக அவர்கள் கூறினர்.