தமிழக சட்டசபையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவாதத்தின்போது சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது.
அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவரது மகனை பற்றியும் ஒரு கருத்தை துரைமுருகன் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு வந்தனர். அப்போது துரைமுருகன் எழுந்து, ஓ.பன்னீர்செல்வம் பற்றி நான் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து சபாநாயகர் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
அப்போது ஒரு பாடலை ஓ.பன்னீர்செல்வம் பாடினார்.
நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இறைவனின் தீர்ப்பு... இடையில் இறைவனின் திரிப்பு... இதுதான் என் நிலைமை... என்று பாடினார்.