நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை (சனிக்கிழமை) குன்னூர் வருகிறார். அவருடன் முப்படை தளபதி மற்றும் 14 ராணுவ உயர் அதிகாரிகளும் உடன் வருகின்றனர்.
இதற்காக நாளை காலை டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் அவர் கோவை வருகிறார். பின்னர் இங்கிருந்து குன்னூர் ஜிம்கானா கிளப் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்.
பின்னர் காரில் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு செல்லும் அவர் நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார்.
அங்கு நடப்பு ஆண்டில் பயிற்சியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுடன் உரையாற்றுகிறார். வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு அவரவர் மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக மொழி பெயர்ப்பாளர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து முப்படை தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். குன்னூரில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் இங்கிருந்து புறப்பட்டு கோவைக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
மத்திய மந்திரி வருகையையொட்டி குன்னூர் வெலிங்டன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ மையம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் ஜிம்கானா கிளப்பில் இருந்து அவர் காரில் பயணிக்க கூடிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கோவையில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் வரும் போது கால நிலை மாற்றம் ஏற்பட்டால், அவர் ஹெலிகாப்டரில் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு சென்று அங்கிருந்து கார் மூலம் குன்னூர் வருவதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.