ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்சி அதிகாரத்தில் உட்காரும் வேலையில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் முல்லா அப்துல் கானி பராதர் நாடு திரும்பியுள்ளார். எங்களால் எந்த நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதி அளிக்கிறோம். உலக நாடுகளும் எங்களுக்கு அதே உறுதியை அளிக்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த ஆட்சியை ஏற்படுத்துவோம் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே துணை அதிபர் அம்ருல்லா சாலே டுவிட்டரில் அதிரடி செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர் இல்லை என்றால், நாட்டை விட்டு ஓடிவிட்டால், ராஜினாமா செய்து விட்டால் அல்லது காலமானால் துணை அதிபர்தான் காபந்து அதிபராவார். நான் தற்போது நாட்டிற்குள்தான் இருக்கிறேன். சட்டப்படி நான்தான் காபந்து அதிபர். அனைத்து தலைவர்களிடமும் ஆதரவையும் ஒருமித்த கருத்தையும் பெற நான்அவர்களை அணுகி வருகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தலிபான்கள் அரசியல் அலுவலக உறுப்பினர் அனாஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமித் ஹர்சாய் மற்றும் மூன்று முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா ஆகியோரை காபூலில் சந்தித்து பேசியுள்ளார்.