பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்களுக்கு மத்தியில் 4 பெண்கள் வீதியில் களமிறங்கி போராடியது அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அங்கிருக்க அச்சம் கொள்ளும் மக்கள், நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெண் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு பலர் நாட்டிலிருந்து வெளியேறி கொண்டிருக்கின்றனர். கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த தாலிபான்கள் பெண்களை மிகவும் மோசமாக நடத்தினர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதோடு குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. பல இன்னல்களை பெண்கள் சந்திக்க நேர்ந்தது.
மேலும், பெண்கள் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் என்றும் கண்கள் கூட வெளியே தெரியக் கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வந்தனர். அக்காலம் பெண்களுக்கு இருண்ட காலம் என்றே வரலாறுகள் கூறுகின்றன. தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றிருப்பதால் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஆட்சியை பிடித்த அடுத்த நாளே, பெண்கள் அழகு நிலையங்களில் வெளியே அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை வெள்ளையடித்து மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாலிபான்கள். இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ என பெண்கள் பீதியில் இறுகின்றனர்.