சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலையில் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச்சூழலால் நாடெங்கும் வாழும் மக்கள் பொருளாதார நலிவுக்குள்ளாகி நிர்கதியற்று நிற்கையில், அவர்களது வாழ்வாதார இருப்புக்கு எதுவொன்றையும் செய்யாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, எரிகாற்று உருளையின் விலையை 25 ரூபாய் ஏற்றி, 875 ரூபாயாக உயர்த்தியிருப்பது மக்கள் மனங்களில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் வரலாறு காணாத வகையிலான விலையேற்றத்தாலும், அதனால் விளைந்த அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையுயர்வாலும் நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாடச்செலவினங்களையே எதிர்கொள்ள முடியாது திணறித் திண்டாடிக்கொண்டிருக்கையில், இப்போது எரிகாற்று உருளையின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது.