தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் உலக நாடுகள் பல தலிபான்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளன. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்னரே பாகிஸ்தான் முழு தார்மீக ஆதரவையும் வெளிப்படுத்தியது. நேற்று கூட பாகிஸ்தானில் தேசிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தி பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ஆங்கில மொழி மீதான மோகத்தை தலிபான்களை ஒப்பிட்டு பேசினார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அடிமை மனநிலையிலிருந்து விடுவித்ததாகவும் அதேபோல தேசிய கல்விக்கொள்கை ஆங்கில மொழி அடிமை மனநிலையிலிருந்து விடுவிக்கும் என்றார். இவ்வளவு நாளும் தலிபான்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வந்த சீனா நேற்று நேரடியாகவே அறிவித்துவிட்டது. தலிபான்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் சீனா செயல்படும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை தெளிவுப்படுத்தியது. தலிபான்களை ஆதரிப்பதால் இந்தியாவுக்குக் குடைச்சல் கொடுக்கலாம், அதேபோல கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என கணக்கு போடுகிறது.
ரஷ்யாவோ முதலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலிபான்களின் அரசை உன்னிப்பாக கவனிக்கும். அதன் பிறகே ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் என கூறியுள்ளது. வல்லரசுகளைக் கைக்குள் போட்டுக்கொண்டதன் மூலம் உலக அரங்கில் தங்களுக்கு இருக்கும் பலத்தை தலிபான்கள் உணர்த்தியுள்ளனர். இருப்பினும் ஐரோப்பா நாடுகளான ஜெர்மனி உள்ளிட்டவை தலிபான்களைக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐநா சபையில் உறுப்பினராக உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகள் தலிபான்களின் சர்வதிகாரப் போக்கை நேரடியாகவே எதிர்க்கின்றனர்.
தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலிபான்கள் மீதான நிலைப்பாடை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசைக் கவிழ்த்துவிட்டு ஆயுதங்கள் மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளார்கள் தலிபான்கள். வருங்காலத்தில் தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டம் எங்களிடம் இல்லை. தலிபான்கள் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத குழுக்கள். ஆப்கானிஸ்தானில் அகப்பட்டிருக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதுதான் பிரதான நோக்கம்” என்றார்.
