ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்தது. இதனால் முதல்வர் ஸ்டாலின் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்தார். இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுதுப்போக்கு இடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இன்றளவும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த சூழலில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வருகின்ற 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. இதனால் ஊரடங்கை மேலும் நீடிப்பதுடன், தளர்வுகள் அளிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.வருகின்ற செப் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டது. எனவே இதன் சாத்தியக்கூறுகள் குறித்தும், திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.