ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனில் நிறைவுபெற்றதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பில் உருவாகி வருகிறது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம். இப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை டிவிவி தானய்யா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் அஜய் தேவ்கன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று ஆலியா பட் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இப்படம் இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த காட்சிகளை படமாக்க கடந்த மாதம் ராஜ மௌலி மற்றும் படக்குழுவினர் உக்ரைன் நாட்டிற்கு சென்றனர். அங்கு பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்கினர். இந்நிலையில் 15 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு முற்றிலும் நிறைவுபெற்று விட்டது. இதனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த மகிழ்ச்சியில் படக்குழுவினரோடு இணைந்து ராஜமௌலி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் பேட்ச் ஒர்க் எனப்படும் சில காட்சிகள் எடுக்கப்படவிருக்கிறது. அந்த படப்பிடிப்பும் விரைவில் முடிந்தவிடும் என கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் கொரானாவால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் திட்டமிட்டப்படி வெளியாவது சந்தேகமே என கூறப்படுகிறது.