தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 1,964பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் தற்போதுவரை 25லட்சத்து 91 ஆயிரத்து 94பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆயுதமாக தடுப்பூசி பார்க்கப்படும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்துக்காக இன்று 5,51,800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகின்றன. 1,33,360கோவாக்சின் தடுப்பூசிகள் சாலைமார்க்கமாக சென்னை வருகின்றன. நேற்றுமுன்தினம் மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3.60 லட்சம் தமிழகத்திற்கு வந்தன. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த தடுப்பூசிகள் அங்கிருந்து தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, மருந்து கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.