ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் 20 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வர எண்ணி தனது படைகளை வாபஸ் செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். தோஹாவில் தாலிபான்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானிலிருந்து தூதரக அதிகாரிகள், அமெரிக்கப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினர். அமெரிக்கப் படைகள் விலகியதால் ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க படையினர் ஆப்கனில் அவர்களுக்காக உதவியாளர்களை மீட்க முயற்சித்தனர். இதனை முறியடிக்க எண்ணிய தாலிபான்கள் ஒரே வாரத்தில் முக்கியமான மாகாணங்களை கைப்பற்றினர். குறிப்பாக காபூலை தாலிபான்கள் கைப்பற்றியது ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாலிபான்கள் வசம் ஆப்கன் சிக்கிக் கொண்டதால் தான் பதவி விலகுவதாக அறிவித்தார் அதிபர் கனி. அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, போர் நடத்த தாங்கள் எண்ணவில்லை. அமைதியாக வெளியேறி விடுங்கள் என தலிபான்கள் எச்சரித்தனர். அதன் படி, அதிபர் கனி வெளியேறியதையடுத்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தாலிபான்கள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அறிவித்தனர்.
தாலிபான்கள் படைத்தலைவர் அப்துல் கனி பாரதார் புதிய இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானை இனி ‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அமெரிக்கா தனக்கு உதவிய ஆப்கனை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் அதே வேளையில் இந்தியாவும் ஆப்கனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டுவர ஏர் இந்தியா விமானத்தை அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.