முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அரசு தலைமை கொறடா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடைபெறவுள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஸ்டாலின். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில், வரும் உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றி பெற பாடுபடுங்கள், மக்கள் மத்தியில் திமுகவுக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி தேர்தலுக்காக பாடுபடுங்கள் என முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில், வரும் 13ம் தேதி மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
அன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ கூட்டம் நடைபெற உள்ளதாகவும் எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் காலையில் திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.