ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பூமியில் விழுந்துள்ள பலம் பொருந்திய கட்சி விரைவில் எழும். உரிய நேரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உரிய நேரத்தில் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும்.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஆகிய காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை உருவாக்கினோம்.
கூட்டணியில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இன்று வரை செயற்படுத்தப்படவில்லை.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் ஆட்சிமாற்றம் ஏற்படும் போது மாற்றமடையாத உறுதியான அரசியல் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார்