இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந்த பல ஆண்டுகளாக உழவாரப் பணிகள் (தூய்மை பணிகள்) செய்ய ஆர்வம் உள்ள தன்னார்வ குழுக்கள் மூலமாக பணிகள் நடந்து வந்தன.
இதனை எளிமைப்படுத்தும் வகையில் www.hrce.tn.gov.in என்ற இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதியை அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் உழவாரப்பணி செய்ய விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஆடி கிருத்திகை, ஆடிபெருக்கு விழாக்களை முன்னிட்டு கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழாக்கள் நடத்தவும், சாமி தரிசனம் செய்யவும் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 539 கோவில்களில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உள்பட 539 கோவில்களில் உள்ள பிரகாரம், நந்தவனம், தெப்பக்குளம், தண்ணீர் தொட்டி, மதில் சுவர்கள், விமானங்களில் உள்ள செடிகள் அகற்றும் பணிகள், தரைத்தளம், மண்டபம், தூண்களை சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.