2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்களில் நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி முகாம் இயங்கி வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் என ஐந்து பெருநகரங்களில்நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் தான் 2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் 11% நபர்கள் இரண்டாம் தவணை செலுத்தி கொண்ட நிலையில், பெங்களூருவில் 10%, டெல்லி, மும்பையில் தலா 7% ,ஐதராபாத்தில் 5% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக பெங்களூரில் 64 சதவீதமும், சென்னையில் 43 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் 45 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி 91%, சென்னையில் 85% செலுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.