தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேவை புரிந்து வரும் ஆட்டோ ஓட்டுநருக்கு, மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பி.சி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக். இவர் கொரோனா இரண்டாவது அலையின்போது, தனது ஆட்டோவில் நோயாளிகளை கட்டணமின்றி இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சேவை புரிந்து வந்தார். இவரது தன்னலமற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பி.சி.பட்டியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட நேற்று முன்தினம் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் நின்றிருந்த கார்த்திக்கின் ஆட்டோவில் மருத்துவத்திற்கு இலவசம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததை பார்த்த ஆட்சியர் முரளிதரன் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கினார். தொடர்ந்து, ஆட்டோவில் நின்றிருந்த கார்த்திக்கிடம் சென்ற ஆட்சியர், அவரது சேவையை கவுரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பி.சி.பட்டி கிராம மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
