நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை கவரும் விதமாக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. குறிப்பாக பெண்களுக்காக அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டம், பேருந்துகளில் இலவசப் பயணம் திட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆட்சிக்கு வந்த முதல் நாளே பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கான கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார். அடுத்த சில நாட்களிலேயே அத்திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
ஸ்மார்ட் கார்டுகளில் பெண்களின் புகைப்படங்கள் கொண்ட குடும்பத் தலைவிகளுக்கே ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000 வழங்கும் திட்டம் நிதி நிலைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம் அமைத்து ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடல் வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கடலோர காவல்படையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.