திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனது 86-வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
தற்போது இந்தியாவில், தர்மசாலாவில் வசித்து வருகிற இவர் தனது பிறந்த தினத்தையொட்டி காணொலி காட்சி வழியாக வெளியிட்ட உரையில், “நான் அகதியாகி, இந்தியாவில் குடியேறியதில் இருந்து இந்தியாவின் சுதந்திரம் மற்றும் மத நல்லிணக்கத்தை நான் முழுமையாக பயன்படுத்திக்கொண்டேன். பண்டைய இந்திய அறிவை புதுப்பிப்பதற்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். நேர்மை, கருணை, அகிம்சை போன்ற சிறப்புக்குரிய இந்திய மதசார்பற்ற அம்சங்களை பாராட்டுகிறேன்” என கூறி உள்ளார்.
தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “86-வது பிறந்த நாளை கொண்டாடிய தலாய்லாமாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ நாம் வாழ்த்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.