இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. தொடக்கம் முதலே மிகவும் வேகமாக நடந்து வரும் இந்த பணிகளால் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதிலும் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகம் அதிகரித்து இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இதைப்போல தனியார் ஆஸ்பத்திரிகளும் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உற்பத்தியாளர்களின் 25 சதவீத தடுப்பூசிகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன.
இந்தநிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 37.43 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு உள்ளன.
இதில் நேற்று காலை வரை 35.75 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதன்மூலம் 1.67 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமும், தனியார் ஆஸ்பத்திரிகளிடமும் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதைப்போல மேலும் 48.65 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த மாதத்தில் (ஜூலை) இதுவரை 2.19 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் 32 சதவீதம் குறைவாகவே தடுப்பூசி வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், இந்த மாதம் கிடைக்கும் மொத்த தடுப்பூசி அளவு குறித்து ஏற்கனவே மாநில அரசுகளுக்கு தெரிவித்து இருப்பதாகவும், அந்தவகையில் இந்த மாதத்துக்கான 12 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்களில், 2.19 கோடி டோஸ்கள் வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது.
அதேநேரம் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்பட்டால், அது குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.