சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடிப்படையிலேயே நாளை (21) நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாளை(21) அதிகாலை 4 மணியுடன் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. எனினும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் நடமாட்டக்கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
அதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்.
எனவே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் இயன்றவரை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.
அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.
ஆசன எண்ணிக்கைக்கு அமைவான பயணிகளுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெற வேண்டும்.
பொது இடங்களில் ஒன்றுகூடல் மற்றும் விருந்துபசாரங்களை நடத்துதல் என்பன முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன.
இதேவேளை வர்த்தக நிலையங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் உரியவாறு பின்றபற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.