வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபா, கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தார். அவரது அழைப்பின்பேரில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று காலை குவைத் சென்றார்.
இது, குவைத்துக்கான அவரது முதலாவது இருதரப்பு பயணம் ஆகும். விமான நிலையத்தில் அவரை உதவி வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் ரசாக் அல்கலீபா வரவேற்றார். இந்திய தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் இந்திய அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இந்நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் அல்ஹமாத் அல்சபாவை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியா-குவைத் இடையிலான தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறைவையொட்டி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இருநாட்டு உறவை உயர்மட்டத்துக்கு கொண்டு செல்லும் உறுதிப்பாட்டுக்காக ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார்.
