தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றி பெற்றது.
சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அ.தி.மு.க. வாக்குகளை கணிசமான அளவுக்கு பிரித்து அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்துவார்கள் என்று சிலர் சொல்லி வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. 66 இடங்களை கைப்பற்றியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வை கைப்பற்றப் போவதாக சசிகலா தொடர்ந்து போனில் பேசி வருகிறார்.
ஆனால் அதை கண்டு கொள்ளாத அ.தி.மு.க. தலைவர்கள் கடந்த மாதம் சென்னையில் கூடி சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (எதிர்க்கட்சி தலைவர்) எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். ஆனால் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
சட்டசபை கொறடா, துணைத் தலைவர் பதவியை தனது ஆதரவாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பிடிவாதமாக இருந்தார். இதனால் அ.தி.மு.க.வில் சலசலப்பான சூழ்நிலை நிலவி வந்தது. அந்த சமயத்தில் சசிகலாவும் போனில் பேசியதால் சலசலப்பு அதிகரித்தது.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் போனில் பேசினார். இதனால் அவர்களுக்கிடையே சுமூகமான சூழ்நிலை உருவானது. நேற்று நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த சமரசம் எதிரொலித்தது.
அ.தி.மு.க.வில் உள்ள 66 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் மட்டும் சொந்த வேலை மற்றும் மருத்துவம் காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 60 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முதலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனியாக அமர்ந்து பேசினார்கள். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், செங்கோட்டையன் ஆகியோர் 2 கட்ட ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்தவும், சசிகலா முயற்சிகளை தடுத்து நிறுத்தவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்தனர். அத்தகைய அதிரடியை மேற்கொள்ள சட்டசபை துணைத் தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், மற்ற மூத்த தலைவர்களும் தீவிரமாக வலியுறுத்தினார்கள்.
முதலில் துணைத் தலைவர் பதவியை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் சம்மதிக்கவில்லை. தனது ஆதரவாளருக்கு அந்த பதவியை கொடுக்க விரும்பினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தியால் வேறு வழியின்றி இறுதியில் துணைத் தலைவர் பதவியை ஏற்க சம்மதித்தார்.
இதன் மூலம் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அ.தி.மு.க. எந்த காலத்திலும் பலவீனம் அடைந்து விடாது. கட்சியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு நான் சட்டசபை துணைத் தலைவர் பதவியை ஏற்க சம்மதித்துள்ளேன். கட்சிக்காக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறினார்.
இதை கேட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. கைதட்டி அவர்கள் ஓ.பி.எஸ்.சுக்கு நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்தனர். இதையடுத்து புதிய நிர்வாகிகளை போட்டியின்றி தேர்வு செய்தனர். அதை துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
கூட்டத்தில் புதிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளை வரும் நாட்களில் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் ஒற்றுமையை மேலும் அதிகரிக்க செய்யும் வகையில் செயல்பட எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவுக்கு வந்துள்ளனர். எனவே கொரோனா பரவல் குறைந்ததும் அ.தி.மு.க. தொடர்பான மேலும் சில முக்கிய முடிவுகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரியவந்துள்ளது.