லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாசாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை ஏற்க முடியாது என்று இந்திய தேசிய லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவில் நடைபெற்று வரும் அநீதிகளுக்கு எதிராக மத்திய மோடி அரசை கண்டித்தும், லட்சத்தீவை காக்கும் பொருட்டும், இந்திய தேசிய லீக் சார்பில் இணைய வழி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய தேசிய லீக் இளைஞரணி தேசிய பொது செயலாளர் சையத் சாதான் அஹமது தலைமை தாங்கினார்.
அப்போது சையத் சாதான் அஹமது பேசியதாவது, ” 97 சதவீதம் இஸ்லாமிய மக்கள் வசிக்கக்கூடிய லட்சத்தீவில் பொறுப்பு நிர்வாகியாக உள்ள பிரஃபுல் படேல் மதரீதியில் பழி வாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மாட்டிறைச்சி தடை போட்டுள்ளதோடு, மதுபான பார்களை லட்சத்தீவில் நடத்த பிரஃபுல் படேல் அனுமதி அளித்து, லட்சத்தீவின் பாரம்பரிய கலச்சாரத்தை குழி தோண்டி புதைத்துள்ளார்.
2 குழந்தைகள் மேல் பெற்று கொண்டவர்கள் தேர்தல் போட்டியிட தடை என்றும், பூர்வாங்க குடிகள் அமைத்துள்ள குடில்களை அகற்றி காலம் காலமாக வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வதாரத்தை பறிக்கும் செயலையும் பிரஃபுல் படேல் அரங்கேற்றியுள்ளார்.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் பாரம்பரிய கலச்சாரம் காக்கப்பட வேண்டுமெனும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பல முறை பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த போதிலும், அதை பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது, லட்சத்தீவில் நடைபெறும் ஜனநாயக படுகொலைக்கு துணை போவது போல உள்ளது.
பிரஃபுல் படேல் பிறப்பித்து வரும் உத்தரவுகளால், லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாசாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை இனியும் ஏற்க முடியாது. ஆகவே பிரஃபுல் படேல் உடனடியாக லட்சத்தீவு பொறுப்பு நிர்வாகத்தில் இருந்து திரும்ப பெறுவதோடு, பிரஃபுல் படேல் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை திரும்ப பெறும் வரை, இந்திய தேசிய லீக் போராட்டம் ஒயாது ” என்று கூறியுள்ளார்.