முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இருக்க அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக காய்கறிகள், பழங்கள், ரொட்டி, பால் போன்றவை தாராளமாக கிடைத்து வருகிறது.
மளிகை பொருட்கள் விற்கும் கடைக்காரர்கள் வீடு, வீடாக பொருட்களை விநியோகிக்க அரசு சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
இதற்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றுள்ள கடைக்காரர்கள் வாகனத்தில் சென்று வீடு, வீடாக மளிகை பொருட்களை வழங்க அனுமதி அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் 4500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அனுமதி அட்டை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 2400 வியாபாரிகளுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 7486 இரு சக்கர வாகனங்கள் 5536 பெரிய வாகனங்கள் என 13 ஆயிரத்து 22 வாகனங்களுக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மளிகை மற்றும் காய்கறிகளின் விலையை கூடுதல் விலைக்கு யாரேனும் விற்பனை செய்தால் அது குறித்து 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
