தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. ஆனால் மற்ற மாநிலங்களில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து கட்சியை மீண்டும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பரிந்துரைகளை வழங்க மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் தலைமையில் ஐவர் குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்திருந்தார்.
அந்த குழு தேர்தல் தோல்வி குறித்து அறிக்கையை சோனியா காந்தியிடம் நேற்று வழங்கியது.
இதுகுறித்து அசோக் சவான் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அந்த மாநிலங்களில் கட்சியை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை சோனியாகாந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க தேர்தல் தோல்வி குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதுதொடர்பாக கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்தார்.