தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி (இன்று) வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் இந்த ஊரடங்கை 7-ந் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:-
* ஆங்கில, நாட்டு மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், செல்லப்பிராணிகளுக்கான தீவன விற்பனையகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* பால், குடிநீர் மற்றும் பத்திரிகைகள் வினியோகம் செய்ய அனுமதியுண்டு.
* வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழம் மற்றும் மளிகைப்பொருட்களை அனுமதியுடன் விற்பனை செய்யலாம். ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக மளிகைப்பொருட்கள் ஆர்டர் பெற்று அவற்றை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதி உண்டு.
* ரேஷன் கடைகள் காலை 8 முதல் பகல் 12 மணி வரை இயங்கலாம்.
* பெட்ரோல், டீசல் பங்குகள் செயல்படலாம். கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு அனுமதி உண்டு.