வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் யானைக்கு தொடர்ச்சியாக 10வது நாளாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா புளியங்குளம் புதூர் காட்டு பகுதியில் கடந்த (14.05) ஆம் திகதி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் காட்டில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 12 வயது மதிக்கத்தக்க யானைக்கு இராணுவத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம மக்களின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்கள வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன் சிகிச்சை அளித்து வருகின்றார்.
இந்நிலையில் காயமடைந்த குறித்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில் அதனை காப்பாற்றும் நோக்கோடு குறித்த இடத்தில் பாதுகாப்பான தளம் ஒன்று அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வரும் நிலையில் ஒன்பதாம் நாளான நேற்று மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரதாபன், இராணுவ உயர் அதிகாரிகள், காவற்துறை உயர் அதிகாரிகள், மடுகந்தை பௌத்த துறவி மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையினை பார்வையிட்டதோடு, குறித்த யானை விரைவில் குணப்படுத்த என்ன மாற்றுவழி செய்யலாம் என உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, பௌத்த துறவியால் பிரித்தோதல் வழிபாடும் இடம்பெற்று யானைக்கு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளது.