பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் வழியாக போதைப்பொருள் கடத்தி கொண்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவத்தை தடுக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினர் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு போதை பொருள் கடத்தி கொண்டுவரப்படுவதாக குஜராத் மாநில போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து, அம்மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து அரபிக்கடல் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குஜராத்தின் ஜஹூவ் துறைமுகத்தில் இருந்து அரபிக்கடலில் 40 நாட்டிகல் மைல் தொலைவில் ஒரு படகு வருவதை கடலோரக்காவல் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த படகை சுற்றிவளைத்த படையினர் அந்த படகை நடுக்கடலில் மறித்து ஆய்வு செய்தனர். மேலும், அந்த படகில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த படகில் 30 கிலோ அளவிற்கு ஹேராயின் என்ற போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த படகு பாகிஸ்தானில் இருந்து வந்தது உறுதியானது. மேலும், பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த போதைப்பொருளை குஜராத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த போதைப்பொருள், படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த படகில் பயணித்த பாகிஸ்தானியர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 30 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 150 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.