இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (95). தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் அவரது மகள், பேரன், பேரனின் மனைவி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொரோனா தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.