நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தொகுதி வாரியாக காவல் துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்களை ஒதுக்கீடு செய்யும் பணி, நேற்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கூடலூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராகுல்திவாரி, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித்குமார் மிஸ்ரா, மாவட்ட எஸ்.பி., பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினர், நுண் பார்வையாளர்கள் சுழற்சி முறையில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றதாகவும், இதில் சுழற்சி முறையில் 400 காவல் துறையினர் மற்றும் 112 நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாவும் கூறினார்.
மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச் சாவடிகளில், 112 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அங்கு வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் உள்ள 50 சதவீத வாக்குச்சாவடிளில் வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எனவும் கூறினார்.