தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், முக்கிய புள்ளிகளை குறிவைத்து ஐ.டி.ரெய்டு நடத்தப்படுகிறது. அதாவது, பாஜக அரசுக்கு எதிரான கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களின் வீட்டில் அடுத்தடுத்து சோதனை நடக்கிறது. அண்மையில் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரனுக்கு சொந்தமான இடங்களிலும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டிலும் திடீர் சோதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டிலும் மருமகன் சபரீசன் வீட்டிலும் கரூரில் செந்தில் பாலாஜி வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்படுகிறது. இவ்வாறு திமுகவினரை குறி வைத்து பாஜக அரசு வருமான வரித்துறை சோதனை நடத்துவது திமுக பிரமுகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இது போன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் திமுக பயப்படாது என்றும் அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஸ்டாலின் மகன் வீட்டில் ரெய்டு நடப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகாரளித்துள்ளார். திமுகவை அச்சுறுத்த வருமான வரித் துறையை பாஜக பயன்படுத்துகிறது என்றும் அதிகாரிகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.