அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் பல முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்துள்ளார்.
அந்த வகையில், அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தியை, ஜனாதிபதி ஜோபைடன் நியமனம் செய்தார். இந்த நிலையில் இவரது நியமனத்துக்கு செனட் சபை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து விவேக் மூர்த்தி அமெரிக்காவின் 21-வது தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘உங்கள் அறுவை சிகிச்சை நிபுணராக பதவியேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒவ்வொரு அடியிலும் என்னை வழிநடத்திய மற்றும் ஆதரித்த எனது குடும்பத்துக்கு இந்த நாள் நான் கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார்.
தொடர்ந்து அவர் ‘‘இந்த கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் அனைவரின் பிடியிலும் நல்ல ஆரோக்கியமுள்ள ஒரு உலகத்தை உருவாக்குவதற்கும் நான் உங்களுடன் பணியாற்ற தயாராக இருக்கிறேன். அதோடு அறிவியலுக்கான குரலாக இருப்பதற்கும் மறு கட்டமைப்பு மற்றும் குணப்படுத்துவதற்கான பாதையில் நம் தேசத்தை ஆதரிப்பதற்கும் தேசத்தின் மருத்துவராக இந்த நிலையை ஏற்க தயாராக உள்ளேன்’’ எனவும் கூறினார்.