ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்கள்; அந்த சந்தேகத்தை போக்கவே, நீதி விசாரனை கேட்டேன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். அப்போது, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் -சசிகலா இடையே பதவி சண்டை வெடிக்கவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர்., 2017 பிப்ரவரி 7-ஆம் தேதி திடீரென்று ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மவுன விரதம் இருந்தார். பின்னர் நான் தர்மயுத்தம் மேற்கொண்டுள்ளேன். சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். இதனால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் என அணி பிரிந்தது, சசிகலா ஜெயிலுக்கு போனதும் இருவரும் அன்னான் தம்பியாக மாறி சசிகலாவை ஓரம்கட்டியது எல்லாம் தமிழக மக்கள் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சசிகலா மீது உங்களுக்கு இன்னும் வருத்தங்கள் உண்டா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், எனக்கு அவர் மீது எந்த வருத்தமும் இல்லை. இப்போது இல்லை எப்பவுமே இருந்தது இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னல் சில சந்தேகங்கள் அவர் மீது இருந்தது. அம்மா சமாதியில் நான் அளித்த பேட்டியை பார்த்தால் உங்களுக்கு தெரியும். சில சூழல்களில் அம்மா மரணத்தில் அவருக்கு கெட்ட பெயர் வரக்கூடிய சூழல் இருக்கிறது. அதற்காக ஒரு நீதி விசாரணை வைத்து அவர் நிரபராதி என்று நிரூபித்தால் அவருடைய கெட்டபெயர் விடுபடும் என்பதை தான் நான் சொல்லிருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் சசிகலா மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தது இல்லையா? என்ற கேள்விக்கு, எனக்கு அவர் மீது எந்த சந்தேகமும் இருந்ததில்லை. நான் அவருடனும், அம்மாவுடனும் பயணித்திருக்கிறேன். 30 ஆண்டுகள் அம்மாவுடன் அவர் இருந்திருக்கிறார்கள். அவர் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை” என்றார்.

