சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் நோய் தொற்று வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதேபோன்று ஒரு சில மாவட்டங்களிலும் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா பரவல், தற்போது அதிகரித்து வருவது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைதொடர்ந்து இயல்பு நிலை திரும்பியது.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.
திருமண நிகழ்ச்சிகளிலும், பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களிலும் கொரோனாவை மறந்து மக்கள் கூட்டமாக கூடினர். இதுவே தற்போது கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்பது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதற்கு முககவசம் அணியாததே முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். எனவே பொதுமக்கள் முககவசம் அணியும் பழக்கத்தை எப்போதும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை கண்டு கொள்வது இல்லை. இது போன்று முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் முககவசம் அணியாதவர்களை பிடிப்பதற்கு சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த விழிப்புணர்வுடன் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள் கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முககவசம் அணியும் பழக்கம் பலரிடம் தற்போது இல்லை. இதுபோன்று முககவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்படும். இதில் பாரபட்சம் காட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் அலட்சியம் காட்டாமல் முககவசம் அணிய வேண்டும்.
கொரோனா பரவல் இன்னும் குறையாமல் உள்ளது என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் நோய் தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.