தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்தி வரும் லாபம் படத்தை இயக்கி வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நேற்று அதன் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். மதியம் வீட்டிற்கு சாப்பிட சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இறந்துவிட்டதாக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது செய்தியாகவும் வெளியானது.
இந்நிலையில் இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பும், அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே உறுதி செய்யப்படாத தகவல்கள் யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார். இயக்குநர் ஜனநாதன் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.