இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. அதன் படி, அந்தந்த மாநில அரசுகள் மீண்டும் கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை கையெலெடுத்துள்ளன. ஒரு சில மாநிலங்கள் ஊரடங்கையும் அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,285 பேருக்கு கொரோனா பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 117 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 15,157 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாகவும் 1,97,237 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து இதுவரை 1,09,53,303 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1,58,306 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.