தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. சில கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதையடுத்து, இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றன. முதல்வர் பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டத்தில் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இவ்வாறு தேர்தலை எதிர்நோக்கி பரபரப்பாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், அரசு பேருந்து ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கு உதவக் கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த ஒரு அரசியல் கட்சிகளுடன் வாக்கு சேகரிக்க கூடாது. தங்களது வாகனம் வீடுகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை ஊழியர்கள் பொறிக்க அனுமதிக்கக் கூடாது. வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அரசியல் கட்சியினருக்கு தகவல் தரக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசு பேருந்து ஊழியர்கள் தேர்தல் பணியை சுதந்திரமாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கும் மாநகர போக்குவரத்துக் கழகம், தேர்தல் பணியில் அரசு பேருந்து ஊழியர்கள் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.