சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது சுற்றுலா வேன் மோதியதில் அக்கா, தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த சின்ன தம்பியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டி மற்றும் அவரது சகோதரி செல்வி. இவர்கள் இன்று காலை குல தெய்வ கோயிலுக்கு செல்வதற்காக, பெத்துரெட்டிபட்டி நால்ரோடு பகுதியில் நின்றிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்றுகொண்டிருந்த சுற்றுலா வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பாண்டி மற்றும் செல்வி ஆகியோர் மீது மோதியது. பின்னர், அருகில் இருந்த பள்ளத்திற்குள் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.