மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை மற்ற மொழிகளில் நடத்த எண்ணம் இருக்கிறதா என்பது குறித்தும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ் தேர்வுகள் மற்றும் ஸ்டாப் சர்வீஸ் கமிஷன் நடத்தும் மத்திய அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி அலுவலர் தேர்வு ஆகியவற்றின் இரண்டாம் நிலைத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதுபோக ரயில்வே துறையில் தொடக்கநிலை வேலைவாய்ப்புக்கான தேர்வுகளும், தபால் துறையில் தொடக்க நிலையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் பொதுத்துறை வங்கிகளின் தேர்வுகளும் தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு தேர்வர்கள் இருந்தால் மற்ற மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படலாம் என்றும் கூறியிருக்கிறது.
இதுகுறித்து ஜோதிமணி, ‘’ முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாதவர்கள் எப்படி எதிர்கொள்வது? ஆங்கிலமோ இந்தியோ தெரிந்தவர்கள் ஒரு மொழி கற்றால் போதும் என்ற நிலையில் மற்ற மொழி பேசுபவர்கள் மற்றொரு மொழியை கற்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை அகற்ற தமிழ் உட்பட பிற மொழிகளில் போற்றுவதாக கூறும் பிரதமர் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எதனால் என்ற கேள்வி இந்தி பேசாத மாநிலத்தவர் இடையே எழுந்து இருக்கிறது’’என்கிறார்.
மேலும், ‘’ வருங்காலத்தில் இது மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு மழுப்பலாக விடை அளித்துள்ளனர். இது இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் குறிப்பாக ஆங்கிலம் கற்க இயலாத எளிய குடும்பங்களில் இருந்து வருவோருக்கு பெரும் அநீதியை தொடர்ந்து இழைத்து வருகிறது நாட்டில் உள்ள அனைவருக்கும் பாரபட்சமின்றி சமமான வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என்றால் அகில இந்திய தேர்வுகள் அனைத்தும் எட்டாம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.