மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியை சேந்தவர் சுப்பிரமணி. இவர் தனது மனைவி இந்திராணி, மகள் மகாலட்சுமி மற்றும் உறவினர்கள் இருவருடன் நேற்று திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் முடித்து நேற்றிரவு 5 பேரும் காரில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் மீது அதிவேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.