திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற காவலர் திட்டத்தை டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா ஆகியோர் கலந்துகொண்டு 50 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனை தொடர்ந்து, கிராமப்புற காவலர்களாக நியமிக்கப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கோவிந்தராஜ், பெண் தலைமைக் காவலர் கிருஷ்ண வேணி உள்ளிட்ட 6 பேரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய டிஜஜி முத்துச்சாமி, பொதுமக்கள் தங்களது குறைகளை வாட்ஸ்அப் மூலம், கிராமப்புற காவலர்களுக்கு தெரிவிக்கலாம் என்றும், இதனால் பொதுமக்கள் யாரும் காவல் நிலையத்திற்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் டிஐஜியும், மாவட்ட எஸ்.பியும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்து சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பி முருகன், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குமரேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.