கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின் எம்.சி பிரிவு குடியிருப்பாளர்கள் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாகவே சுமார் இரண்டு மாதங்களாக அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் பயணக்கட்டுப்பாடுகள் விதித்து இரு மாதங்களாகியும் இதுவரை அப்பிரதேசம் பயணக்கட்டுப்பாடுகளிலிருந்து தளர்த்தப்படாமை குறித்து வினவிய போதே ஆளுநர் நேற்றுமுன்தினம் (3) மாலை மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக கடந்த இரு மாதங்களாக கண்டி மஹியாவை பகுதியிலுள்ள எம்.சி மற்றும் எம் டி பிரிவுகளுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அப்பகுதியின் எம்.டி பிரிவிவைச் சேர்ந்த பொதுமக்கள் கொவிட் 19 சுகாதார பரிந்துரைகளை முறையாக பின்பற்றுவதால் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இரண்டு பிரிவுகளையும் ஒரே நேரத்தில் பயணக்கட்டுப்பாடுகளிலிருந்தும் தளர்த்த முடியாது. எம்.டி பகுதியை மட்டுமே திறக்க எம்.சி பிரிவில் வசிப்பவர்களின் எதிர்ப்பு காரணமாக பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.