இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான 1899ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகத்தின் (எஸ்எஸ்சி) பிரதான அனுசரணையாளராக அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இதன்படி, 2021 முதல் 2023 வரையான மூன்று வருடங்களுக்கு எஸ்எஸ்சி கழகத்தின் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகள் (முதல் தர மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்) மற்றும் அந்தக் கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த வாரம் அனுசரணைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவம் எஸ்எஸ்சி கழகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அக்கழகத்தின் தலைவர் டபிள்யூ. ரீ. எல்லாவெல கருத்து தெரிவிக்கையில்,
“பிரபல தேயிலை நிறுவனமான அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதையிட்டு பெருமை அடைகின்றோம். மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் எமக்கு உதவ வந்ததுள்ளது. இதன்மூலம் எமது கிரிக்கெட் விளையாட்டை மேலும் அபிவிருத்தி செய்து உயர்ந்த நிலையை அடையக்கூடியதாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.