உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கான மதிப்பீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலய சூழலும் நேற்றைய தினம் பார்வையிடப்பட்டது.
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கான செலவு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டுப் பணிகள் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேரடியாக சிவன் கோவில் பகுதிக்குச் சென்று அகழ்வாராச்சிக்கான மதிப்பீடுகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்திற்கொண்டு அலுவலகத்தில் வைத்தே செலவு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் (30.01.2021) உருத்திபுரம் சிவன் கோவில் பகுதியை, பிக்கு ஒருவர் மற்றும் இராணுவத்தினர் சென்று பார்வையிட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் சனிக்கிழமை உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதிக்கு பிக்கு ஒருவர் நண்பகல் வேளையில் வருகை தந்ததாகவும் பிக்கு சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அப்பகுதிக்கு காவற்துறையினர் வந்ததாகவும் பின்னர் மாலை வேளையில் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்த்துச் சென்றதாகவும் ஆலய பரிபாலன சபையின் தலைவர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்காக புத்தசாசன அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு ஜனவரி மாதம் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போது அங்கு ஏதாவது பௌத்த வரலாற்று எச்சங்கள் காணப்படுமாயின் அந்த இடத்தில் புதிய விகாரை ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கின் சில பிரதேசங்களில் தமிழ், பௌத்தம் இருந்தமைக்கான சான்றுகள் முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தது. எனவே இங்கும் அவ்வாறு ஏதேனும் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அங்கு விகாரை அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது