கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கை அரசாங்கத்தின் நோக்கமும் அதுவேதான். கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கிழக்கு முனையை இந்தியாவிற்கு பதிலாக வேறுநாடுகளுக்கு கொடுத்திருப்பார்கள். கடந்த காலங்களில் அந்த அரசாங்கம் அதனைதான் செய்ததென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கப்படுகின்ற 16 கற்கை நெறிகள் இன்று ( 28 ) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கற்றலில் ஈடுபடும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒருதொகை கணனி மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்களும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் கையளிக்கப்பட்டன.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரவிக்கையில், இந்த தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கம்பனிகளுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுத்து வருகின்றது.
கடந்த அரசாங்கத்தில் இந்த அளவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.
எனினும் கம்பனிகள் கொடுக்கமுடியாது என்ற விடாப்பிடியிலேயே இருக்கின்றனர்.
இந்நிலையில் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இது ஒரு நல்ல விடயமாகும் இந்த விடயத்தினை அரசாங்கம் முன்னெடுத்தால் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
எனினும் கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப்பேச்சுவார்த்தை மட்டுமல்ல. அதில் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெரியாதவர்கள் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
தொழிலாளர்களின் நலனில் எவராவது பொறுப்பேற்றால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயார்.