சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியேற்றினார். ஆளுநர் கொடியேற்றியதும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. முப்படை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொள்கிறார். தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்துக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்பு, சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பொது மக்கள், பாா்வையாளா்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் விழாவைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. குடியரசு தின விழாவின்போது, மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீா் விருது ஆகிய விருதுகளுடன் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட உள்ளது.