கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாகவும், இந்த தடுப்பூசியால் பக்க விளைவு எதுவும் இல்லை என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாட்டிலேயே கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. மாநில அரசு திறம்பட செயல்பட்டு கொரோனா பரவலை குறைத்துள்ளது.
தற்போது மாநிலத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருகிறது. இந்த தடுப்பூசியால் பக்க விளைவு எதுவும் இல்லை.
பல்லாரியில் தடுப்பூசி போட்ட காரணத்தால் ஒருவர் உயிரிழந்தார் என கேட்கிறீர்கள். தடுப்பூசி போட்டு கொண்டவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட கூடாது. தடுப்பூசி போட்டு யாராவது மரணம் அடைந்தால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவருடைய மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.