திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவின் கும்புறுப்பிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவில் பயிரிடப்பட்ட உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் இப்பிரதேசத்தில் பப்பாசி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதையும் அரசாங்க அதிபர் களத்திற்கு சென்று மேற்பார்வை செய்ததுடன், பிரதேச விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதில்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பகுதியில் உரிய வடிகாண்கள் இன்மையால் பயிர்ச்செய்கை பாதிக்கப்படுகிறது. பாரம்பரியமாக செய்கை பண்ணப்பட்டு வந்த காணிகளை மீண்டும் பயிரிட அனுமதி தருமாறும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தைவாய்ப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்து தருமாறும் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.
வடிகான்களை புனர்நிர்மாணம் செய்ய 10 இலட்சம் ரூபாயை ஒதுக்குவதாகவும் பாரம்பரியமாக செய்துவந்த பயிர்ச்செய்கை நிலங்களை பயிர்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான இணைப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதன்போது அரசாங்க அதிபரால் கவனம் செலுத்தப்பட்டது.
கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக தற்போது இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களில் மாவட்டத்தில் உற்பத்தி செய்ய முடியுமான பொருட்களை விருத்தி செய்வது தொடர்பில் விரைவில் உரிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இதன் மூலம் உயரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், குச்சவெளி பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் லவகுசராசா, அதிகாரிகள், பிரதேசவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.