பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதில், 36 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் பின்னவல வனப்பகுதியில் இருந்து நேற்று (22) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பின்னவல பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், 2023 மார்ச் 16 ஆம் தேதி காணாமல் போனதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் தந்தை பின்னவல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (22) மஹா ஓயா, பதியத்தலாவ வீதிக்கு அருகில் உள்ள ஆற்றில் 41 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மிதந்துள்ளது.
உயிரிழந்தவர் மஹா ஓயா தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியொன்று மீட்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.