அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவரது நிர்வாகத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது தனது நிர்வாகத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக 14 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இதில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒருவரது பெயர் ரேவதி அத்வைதி. மற்றொருவர் பெயர் மனீஷ் பாப்னா. இவர்களில் ரேவதி அத்வைதி பிளக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.
எம்.பி.ஏ. படித்து உள்ள இவர் 2019-ம் ஆண்டில் உற்பத்தியில் புதிய சகாப்தம் படைத்தார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இவர் இதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்ட ஈட்டனின் மின்சார துறை வணிகத்திற்கான தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்தார்.
இவர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பார்ச்சூனின் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக திகழ்ந்தார். அதற்கான பட்டியலிலும் அவர் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல மற்றொரு இந்தியரான மனீஷ் பாப்னா இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மற்றும் மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் அரசியல், பொருளாதார வளர்ச்சியில் முதுகலைப்பட்டங்களையும் எம்.ஐ.டியில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங்கில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.